|

-விநாயகர் சதுர்த்தி-
23-8-2009
அல்லல் போம் வல்வினை போம்
அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.
அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக் கணபதியைக் கை தொழுதக் கால்
- அருணாசலம் என்னும் திருவண்ணாமலை கோபுர வாசலில் வீற்றிருக்கும் செல்வக் கணபதியை
கை தொழுது கும்பிட்டால்
அல்லல் போம் - எல்லாவிதமான தடங்கல்களும் தொல்லைகளும் போகும்
வல்வினை போம் - என்ன செய்தாலும் பின் தொடர்ந்து தன் பயனைக்
கொடுக்கும் நாம் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் அழிந்து போகும்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் - பிறவிகள் எடுக்கக்
காரணமான முன்வினைகளின் தொல்லை தீர்ந்து போகும்
போகாத் துயரம் போம் - என்றும் நீங்காமல் மனத்தில் நிற்கும்
துயர நினைவுகள் எல்லாம் தெளிந்து போகும்
கெட்டவைகள் போகும். அது மட்டுமா
நல்ல குணம் அதிகமாம் - நல்ல குணங்கள் நம்மில் மேன்மேலும்
பெருகும்.
அதனால் செல்வக் கணபதியை எந்நேரமும் வணங்குங்கள்
***************
விநாயகர் வழிபாடு வேதகாலத்திலோ,
அதற்கு பிற்பட்ட காலத்திலோ கிடையாது. கிபி 6 ஆம் நூற்றாண்டிற்கு பின்பு, அதாவது
சிலப்பதிகாரத்துக்கு பிறகு, அல்லது களப்பிரர் ஆட்சி காலத்தில் தான் விநாயகர்
வழிபாடு தமிழகத்தில் வந்தேறி இருக்கமுடியும் என்பது வரலாற்றிஞர்களின் மற்றும்
தமிழ் ஆய்வலர்களின் துணிபு. புத்தவிகார்கள் இருந்த இடத்தை ஆக்கிரமித்தில்
விநாயக பெருமானுக்கு பெரும்பங்கு உண்டென்பர். ஆரசமரத்தடியும், ஆற்றங்கரையும்,
துணையற்ற ஒற்றை அருள்வடிவம் புத்தருக்கும் உண்டு என்பதை ஒப்பு நோக்குக.
விலங்குவழிபாடின் நீட்சியாக ஆனை வடிவத்தை மனித உடலுடன் பொருத்தி வழிபடும் ஒரு
முறையாகவும் விநாயக வழிபாட்டைச் சொல்கிறார்கள். வேத வியாசர் பிள்ளையாரை வைத்து
மகாபாரதம் எழுதியதாக புராணக் கதை இருந்தாலும் வியாசர் வாழ்ந்த காலத்தில்
உருவாகியிருந்த நான்கு பிராகிருத (பாலி) வேதங்களான இருக்கு - சாம வேதத்தில்
பிள்ளையார் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை.
வடபுலத்தார் - தென்புலத்தார்
ஒற்றுமைக்காக இரண்டிற்கும் தொடர்பில்லாதா ஒரு உருவ வழிபாட்டை வழியுறுத்தும்
வண்ணம் விநாயக வழிபாடு பரவியிருக்க வேண்டும். முருகனுக்கு உள்ள நீண்ட சங்ககாலப்
பின்னணிகள் விநாயகருக்கு இல்லை. இருந்தும்.. விநாயகரை சொந்தமாக்கிக் கொள்ள
விநாயகனை மூத்தமகனாக அறிவித்தது சைவம். அதாவது முருகனுக்கு முன் பிள்ளையார்
வழிபாடு தமிழகத்தில் அறிய பெற்றதன்று. வைணவமும் விநாயக வழிப்பாட்டை புறம்
தள்ளவில்லை. இருந்தாலும் 'நாராயண நமோ' விற்கு அடுத்தது தான் கனபதி வணக்கம்.
நன்கு கவனித்து உற்று நோக்கினால் சோழர் காலத்து பெரிய கோவில்களில் விநாயகர்
உருவங்கள் இருந்தது கிடையாது. இப்பொழுது நீங்கள் பார்பதெல்லாம் பின்பு
ஒட்டவைக்கப்பட்டது. சில அமைப்பின், நிறத்தின், கலையில் அது ஒட்டவைக்கப்பட்டது
தான் என்பது நன்கு தெரியும் படி இருக்கிறது. நான் கங்கை கொண்ட சோழபுரம்
கோவிலிலும் தஞ்சை பெரிய கோவிலும் ஒட்டவைக்கப்பட்ட விநாயக சிலைகளைப்
பார்த்திருக்கிறேன். அதே போன்று அந்த கோவில்களில் புத்தருக்கென்ற தனி சன்னதியும்
இருக்கிறது.
புராணக்கதைகள் பெரும்பாலும் அருவருக்கத்தக்கதாகவும்,
பகுத்தறிவுக்கு ஒவ்வாதையாகவையாகவே இருக்கும். உதாரணத்துக்கு பார்வதி என்கிற
உமையாள் குளிக்கும் போது உடலில் உள்ள அழுக்குகளை திரட்டி ஆற்றங்கரையில்
வைத்ததாகவும் ( அவ்வளவு அழுக்கா ?) அது பிள்ளையாராக மாறியதாகவும் இழிவான புராணக்
கதைகளைக் கேட்டதாலேயே பிள்ளையாரின் தோற்றம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று என்று
பகுத்தறிவாளர்கள் இராமனுக்கு கொடுத்த அதே தண்டனையை பிள்ளையாருக்கும் கொடுத்தனர்.
பிள்ளையார் அழுக்கில் இருந்து
பிறந்தது கட்டுக்கதை. ஆனால் பிள்ளையார் சிலைகளால் கடற்கரை அழுக்காவது நடப்பு
கதைதான். :) . வினைதீர்க்கும் நாயகர்.. கலவர நாயகரானது சோகம் தான் :)

அதையும் மீறி
நாடெங்கிலும் பிள்ளையார் சிலைகள் தெருவுக்கு தெரு இருக்கத்தானே செய்கிறது என்பது
பக்தியாளர்களின் எதிர் கேள்வி. தற்காலத்தில் திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் 'இரவில்
ஒரு பெண் குழந்தையுடன் வந்து கதைவை தட்டி தண்ணிக் கேட்பதாகவும், கொடுக்க
மறுப்பவர்கள் வாந்தி பேதி கண்டு மாண்டுவிடுவதாகவும்' கதைகட்டி, அதை தவிர்பவர்கள்
வீட்டுக்கு வீடு வேப்பிள்ளை கட்டி வைத்தால் தப்பிக்கலாம் என்று வதந்தி பரவியது.
அது போன்றே 'திருடி கொண்டு வரும் பிள்ளையார், சக்தி வாய்ந்தவர்' என்று
கட்டுக்கதை கட்டப்பட்டு, பிள்ளையார் சிலைகள் வீதிக்கு வீதி வந்தன.
சைவ சித்தாந்தக் கூற்றுப்படி பிள்ளையார் வடிவம் என்பது புராணக்கதை பின்னனிகள்
கொண்டதல்ல. வேழ முகம் என்பது 'ஓ'ம் என்ற ஓங்கார வடிவத்தின் உருவகம் என்கிறார்கள்.
யானை முகத்திற்கும் 'ஓ' என்ற வடிவத்தையும் ஒப்பு நோக்குக. அதனுடன் இணைந்த பானை
வயிறு உலகை குறிப்பதாகவும். ஓம் என்ற மந்திரத்துடன் இணைந்த உலக தத்துவமாக
சொல்கிறார்கள். சைவ - வைணவ சண்டைகளை நிறுத்திக் கொள்வதற்க்காகவும் பொதுவான
கடவுளாக விநாயக வழிபாடு பரவியிருக்கக் கூடும்.
-- govikannan.blogspot.com |