Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

 

உண்மையின் ஒரு வடிவம்

 

 

பரமஹம்சர் மறைந்தபோது ரமணருக்கு ஏழு வயதாக இருந்திருக்கிறது. தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக நான் மீண்டும் மீண்டும் அவதரிப்பேன் என்று க்ருஷ்ணன் சொன்னதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சமுதாயத்தவருக்கும் ஒரு வழிகாட்டியை அனுப்பியிருப்பதாக ஹதீதும் உள்ளது. ரமணரின் வாழ்க்கையைப் படித்தபோது எனக்கு இது நினைவுக்கு வந்தது.

விவேகானந்தருடைய வாழ்க்கையைவிட ரமணருடைய வாழ்க்கை என்னைக் கவர்கிறது. ரமணர் உள்ளத்தால் வாழ்ந்தவராக இருக்கிறார். அவ்வப்போது தலையால் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைவிட அவருடையது மேலானதாக இருக்கும்தானே? "உங்களுக்கு எப்படி சிந்திக்காமல் இருக்க முடியாதோ, பகவானுக்கு சிந்திப்பது அவ்வளவு கஷ்டம்" என்றார் அவர்!

ரமணரிடம் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் அவருடைய சடங்குகளற்ற வாழ்க்கை, குறைவான ஆனால் மிகத்தெளிவான ஒளியூட்டும் பேச்சு, நிறைவான மௌனம். ஆன்மிகப் பாதையில் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் ரமணரின் வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். எனக்குக் காலதாமதாக இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ரொம்ப சின்ன வயதிலேயே இறைவன் மீது காதல் ஏற்பட்டுவிடுகிறது ரமணருக்கு. இறைவனை தன் தகப்பனாகவே பாவிக்கிறார். "நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தைவிட்டுக் கிளம்பி விட்டேன்" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுத் திருவண்ணாமலை நோக்கிக் கிளம்பிவிடுகிறார்! அந்தக் கடிதத்தில் 'இப்படிக்கு' என்று போட்டவர் பெயரைப் போடாமல், கையெழுத்திடாமல் சென்றிருக்கிறார். மறதியால் அல்ல. வேண்டுமென்றேதான். I am nobody. Are you nobody too? என்ற எமிலியின் கவிதை ஞாபகம் வருகிறது எனக்கு.

வீட்டை விட்டுக் கிளம்பிய நான்காம் நாள் நாவிதருக்குக் கொடுத்தது போக மீதியிருந்த மூன்று ரூபாய் சொச்சத்தை திருவண்ணாமலைக் கோயில் அய்யன் குளத்தில் விட்டெறிந்த பிறகிலிருந்து வாழ்நாள் முழுவதும் பணத்தைத் தொட்டதில்லை ரமணர்.

குழம்பு, ரசம், காய், பாயசம் என்று தனித்தனியே உணவு உண்டதில்லை. எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் எல்லாவற்றையும் கலந்து ஒன்றாக்கி அதில் கொஞ்சம் உண்பாராம். "உங்கள் எல்லோருக்கும் பலவிதமான ருசிகள் உள்ளன. எனக்கோ ஒரே ஒரு ருசிதான்" என்று சொன்னார். அவர் சொன்னது உணவின் ருசியை மட்டும்தானா?

அகந்தை அறவே இல்லாமல் இருப்பதும் இன்பதுன்பங்களுக்கு அப்பாற்பட்டிருப்பதும் ஞானிகளின் முக்கிய குணங்களாகும். இந்த விஷயத்தில் ரமணர் ஒரு நல்லுதாதரணமாகத் திகழ்கிறார். "பிச்சையெடுக்கும்போது நான் அனுபவித்த கௌரவத்தையும் பெருமிதத்தையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது" என்று அவர் சொல்கிறார்!

"நீங்கள் நல்லது (இன்பம்) என்று நினைப்பது உங்களுக்கு வரும்போது சந்தோஷப்பட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றீர்கள். அது சரிதான். ஆனால் கெட்டது (துன்பம்) என்று கருதுவது வரும்போதும் அதே அளவுக்கு இறைவனுக்கு நன்றி பாராட்ட வேண்டும்" என்று சொல்கிறார்!

யானை எப்போது பார்த்தாலும் திதிக்கையை ஆட்டிக்கொண்டே இருக்கும். அதனிடத்தில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால் அது அதையே பற்றிக்கொண்டு துதிக்கையை ஆட்டாமல் அப்படியே இருக்கும். அதே போன்றதுதான் மனித மனமும். அது சதா பலவிதமான எண்ணங்களினூடே ஊசலாடிக்கொண்டே இருக்கிறது. அதற்கு இறை நாமத்தை ஜபிக்கக் கொடுப்பதன் மூலம் அதை ஒரு நிலைப்படுத்த முடியும் என்று ஒரு இடத்தில் கூறுகிறார்.

ஒருமுறை ஹம்·ப்ரீஸ் என்ற வெள்ளைக்காரர் ரமணரிடம், "நான் இந்த உலகத்துக்கு உதவி செய்ய விரும்புகிறேன். செய்வேனா?" என்று கேட்கிறார்.

அதற்கு ரமணர், "முடியும். உனக்கு உதவி செய்து கொள்வதன் மூலம், இந்த உலகத்துக்கு உதவி செய்கிறாய். நீதான் உலகம். நீ இந்த உலகத்திலிருந்து வேறல்ல. இந்த உலகம் உன்னிலிருந்து வேறல்ல" என்று பதில் சொல்கிறார். (இப்னு அரபி போன்ற இஸ்லாமிய ஆன்மிக ஞானிகள் இதே கருத்தைத்தான், இந்த அத்வைத நிலையைத்தான் 'வஹ்தத்துல் வுஜூத்' என்று குறிப்பிடுகிறார்கள்).

சித்துகள் என்று சொல்லப்படும் அற்புதங்கள் நிகழ்த்துவதை விட்டும் ஒரு மனிதன் விடுதலை பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதே போலவே, 'கராமாத்' எனும் அற்புதங்கள் நிகழ்த்தியதைப் பற்றி எந்த முஸ்லிம் இறைநேசரும் தனது எழுத்திலோ பேச்சிலோ பெருமையாகச் சொல்லிக் காட்டியது கிடையாது.

தன்னுடைய கையில் சார்க்கோமா எனப்படும் ஒருவித புற்று நோய்க்கட்டி வந்தபோதுகூட அவர், "நம் கையிலே ஒரு சுயம்பு லிங்கம் வந்திருக்கிறதே" என்றுதான் அதை வேடிக்கையாக்கிச் சொன்னார்.

"குரு என்று ஒருவரை ஏற்றபின் ஏன் எல்லா பாரங்களையும் நீயே சுமந்து கொண்டிருக்கிறாய்? பெட்டிய அதற்கான இடத்தில் வைத்துவிட்டு பயணம் செய்வதுதானே உன் வேலை" என்றார் அவர்.

"உடம்பு என்பது வாழை இலை மாதிரி. எத்தனை விதமாகப் பரிமாறிச் சாப்பிட்டாலும் கடைசியிலே தூக்கிப் போடத்தானே வேண்டும்? மடிச்சுக் கையிலே பத்திரமா வச்சுக்க முடியுமா?" என்று கேட்டார் அவர். எவ்வளவு அற்புதமான உதாரணம்!

இந்திய நாட்டின் வாழ்ந்த வெகுசில உண்மையான, தலைசிறந்த ஞானிகளில் ஒருவர் ரமணர் என்பதற்கு இதைவிட நல்ல சான்றுகள் என்ன வேண்டும்?

அவர் வாழ்க்கை எனக்குப் பல தெளிவுகளை ஏற்படுத்துகிறது. அவருக்கு என் மானசீகமான மரியாதைகள்.

ரமண சரிதம். மதுரபாரதி. கிழக்கு பதிப்பகம். முதல் பதிப்பு, ஜனவரி 2005. பக்கங்கள் 200. விலை ரூ 80/