Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                              Home           World News          Home            Data Entry           Skills          Insurance       Real Estate      contact Us

மகரதீபத்தின் அற்புதம்  

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் மகர விளக்கு பூஜையின் போது, பொன்னம்பல மேடு என்று அழைக்கப்படும் மலை முகட்டில் தெரியும் ஜோதி இயற்கையானது என்றும், ஐயப்பனே ஜோதிவடிவாய் காட்சியளிக்கிறார் என்றும் பரவலாக ஐயப்ப பக்தர்களுடைய நம்பிக்கை.

இப்படியிருக்க சபரிமலை தலைமை தந்திரி கண்டரு மகேஸ்வரு அவர்கள், கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் மகர விளக்கு பூஜையின் போது, பொன்னம்பல மேடு என்று அழைக்கப்படும் மலை முகட்டில் தெரியும் ஜோதி இயற்கையானது அல்ல என்றும், அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரு, சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரது சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மகர விள்ககு வேறு, மகர ஜோதி வேறு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி அன்று கிழக்கு திசையில் தோன்றும் நட்சத்திரத்தை குறிக்கும் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், மகர விளக்கு என்பது புராண காலத்தில் ஐயப்பனின் மூலஸ்தானமாக இருந்த பொன்னம்பல மேட்டில் ஏற்படுவதாகும்.

மகர விளக்கு ஏற்றும் இந்த வழக்கம், பரசுராம முனிவரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை நினைவூட்டும் விதமாகத்தான் இப்போது அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. காடுகளில் வசித்த பழங்குடி மக்களால் இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

மகர விளக்கும் மகர ஜோதியும் ஓன்று என நினைக்கும் சிலரது கருத்துக் காரணமாக இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது இது தேவையில்லாதது என்று அவர் கூறியிருந்தார்.

இது பற்றி சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுரானந்தன், மகர விளக்கு தீபம் எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

 

சரி. இதைப்பற்றி ஈ. வெ. ரா. பெரியார் அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள அவருடைய புத்தகங்களை புரட்ட ஆரம்பித்தோம். 'அய்யப்ப பக்தர்களுக்காக' என்ற அவருடைய புத்தகத்தில் 'மகரதீபத்தின் அற்புதம்' என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு உள்ளது.


மகரதீபத்தின் அற்புதம்

       திரு. ராகவன்பிள்ளையும் அவருடன் சேர்ந்தவர்களும் ஓரு தனிப்பந்தம் கட்டுவதற்கு பதிலாக பரவலாக மரக்கிளைகளை நாட்டினார்கள். அவற்றில் எல்லாம் துணிப்பந்தம் கட்டி எண்ணையையும் நனைத்து தயாராய் இருந்தனர். மாலை மங்கியது. பொன்னம்பலமேட்டிலிருந்து ஆட்கள் டிரான்சிஸ்டரில் சபரிமலை நிகழ்ச்சிகளின் நேர்முக வர்ணணைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென பக்த ஜனங்கள் எல்லாம் அம்பலமேட்டை நோக்கி மகர ஜோதி காண திரும்பி இருக்கின்றனர் என்று கூறப்பட்டது. கேட்டவுடனே அம்பலமேட்டிலிருந்தவர்கள் பந்தங்களுக்கு தீயூட்டினர். உடனே ரேடியோவில் கேட்டது, மகர ஜோதி அதோ தோன்றிவிட்டது அடுத்த நிமிடம் தொடர்ந்து ஜோதியின் ஓரு வரிசை தெரிகிறது”. இதைக் கேட்டபோது வாணங்களுக்கு தீயிட்டனர். அவை சப்தத்துடன் வானத்தில் பாய்ந்தன. அப்போது ரேடியோவில் இப்படி சொல்லப்பட்டது. மகர ஜோதி பல வண்ணங்களில் வானத்தை நோக்கி உயர்கிறது”. பிறகு வர்ணணையாளர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அவர் திகைப்பில் மூழ்கி விட்டார். இத்தனை அற்புதங்களை அவர் கண்டதே இல்லை. அறிவாளியாகிய அவருக்கு மகர ஜோதியின் ஏமாற்று புரிந்திருக்க வேண்டும். அவர் இனி, நான் மைக்கினை மிஸ்டர் தினகரனின் கையில் கொடுக்கிறேன் என்று கூறினார். மைக்கினை வாங்கிய மிஸ்டர் தினகரனுக்கு விஷயம் ஏமாற்று வேலை எனத் தெரிகிறது. எனவே, சுற்றுபுறங்களை வர்ணிக்கத் தொடங்கினாரேயன்றி, மகர ஜோதியை விவரிக்க முயலவில்லை.

      இதுதான் மகர தீபத்தின் அற்புதம்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

 

********************************************************************************************

மகர ஜோதி பொய்,  ஐஸ் லிங்கம் பொய்,  பக்தி பரவசமும் பொய்

சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

‘இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?’ என்ற கேள்விக்கு “சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா?  “தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.

மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல.  பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.

கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை.  அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.

amarnathதெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய ‘குச்சி ஐஸ்’ வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.

மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! “முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை” என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? “பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை” என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! “குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்” என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.

காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு.  இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, ‘அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல’  என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08).

இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.

“”இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு”" என்று சொன்னால், ‘இல்லையில்லை,  அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது  எனவே தெய்வீகமானது’ என்று கத்துகிறார் இராம. கோபாலன். ‘அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது’ என்று சொன்னால் ‘இல்லையில்லை, அது இயற்கையானது  எனவே தெய்வீகமானது’ என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!

மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?

“கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?”  என்று குமுறியிருக்க வேண்டாமா? ‘அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்’ என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். “பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், பயங்கரவாதிகளை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக்கத் தானா?” என்று கொதித்திருக்க வேண்டாமா? அந்தக் குச்சி ஐஸைப் பாதுகாக்க பாரத் பந்த் நடத்துகிறது பாரதிய ஜனதா. அதற்கும் கூட்டம் சேருகிறது.

பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? ‘மகரஜோதி பொய்’ என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை ‘மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்’ என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?

மூடநம்பிக்கை, பகுத்தறிவு, ஏமாற்றுபவன்ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த ‘பக்தி’. காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்குப் பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள்..! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.

130120081921புதுப்பட ரிலீஸ் அன்று கட் அவுட்டுக்குப் பால் அபிசேகம் செய்யும் ரசிகனின் பரவசம், நூறு ரூபாய்ஒரு குவாட்டர் என்று கறாராக ரேட் பேசிக் கொண்டு லாரியில் ஏறி வந்து ‘தலைவா’ என்று உணர்ச்சி வசப்படும் தொண்டனின் மனக்கிளர்ச்சி, இலஞ்சத்தை அழுதுவிட்டு அப்புறமும் அதிகாரியிடம் ‘ங’ போல் வளையும்’ நெளிவு சுளிவு,  மொய் எழுதும் வயிற்றெரிச்சலை மறைத்தபடி திருமண வீட்டில் மலர்ந்து மணம் பரப்பும் புன்னகைகள்..! அன்றாட வாழ்வில் நாம் காணும்  இந்த ‘உணர்ச்சிகள்’ எல்லாம் அமர்நாத் யாத்ரீகர்களின் பரவசத்தையும் அய்யப்பன்மார்களின் மனக் கிளர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையா?

இந்த மத உணர்ச்சி ஒரு மயக்கமென்றால், அது ஆட்படுத்தப்பட்ட மயக்கம் மட்டுமல்ல, விரும்பி ஆட்படும் மயக்கம். இது தெய்வீக அபினி மட்டுமல்ல, லவுதீக அபினியும் கூட. இது புனித யாத்திரை என்ற முகமூடி அணிந்த இன்பச் சுற்றுலா. இந்தப் போலி பக்தியை ஆன்மீக அனுபவமாக ‘உணர்ந்து’ மயங்கும் பொருட்டு ஒரு ‘தெய்வீக கிளைமாக்ஸ்’ பக்தனுக்கே தேவைப்படுகிறது.

எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து  காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!

‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ என்ற திரைப்படத்தில் பார்த்த ஒரு காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது. பல வகையான விக்கிரக வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் யூத மக்களிடம் “இவையெல்லாம் கடவுளல்ல, உண்மையான கடவுளின் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவருகிறேன்” என்று கடவுளைத் தேடி மலைக்குச் செல்வார் மோசஸ். போனவர் திரும்புவதற்குத் தாமதமாகவே, “ஒரு கடவுளில்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் நாம் காத்திருக்க முடியும்?” என்று விசனப்பட்ட மக்கள் ஒரு எருமைக்கிடா பொம்மையைக் கடவுளாக்கி அதைத் தலையில் வைத்துக் கூத்தாடத் தொடங்குவார்கள்.

அந்தக் கூத்தும் இந்தக் கூத்தும் ஒன்று போலத் தோன்றினாலும் ஒன்றல்ல. அது அச்சத்திலும் மவுடீகத்திலும் மனிதகுலம் ஆழ்ந்திருந்த, அறிவியல் வளராத காலம். அது பல் முளைக்காத குழந்தையின் மழலை. இன்று நாம் காண்பதோ கிழவனின் மழலை. “ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர்வாழ்வேன்” என்று மன்றாடும் காதலனைப் போல, ‘எங்களுக்கு ஒரு மாயையை வழங்கு’ என்று இறைஞ்சுகிறார்கள் இந்த பக்தர்கள்.

சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி ‘சென்னையில் அமர்நாத்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது.  ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ‘சீனிவாச திருக்கல்யாணத்தை’ சென் னையிலேயே நடத்தி, ‘சென்னையில் ஒரு திருப்பதி’ என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். ‘கோயிந்தா கோயிந்தா’ என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.

ஷாம்பு பாட்டில் வாங்கும் வசதியில்லாதவர்களுக்காக இப்போது சாஷேக்களில் தொங்குகிறார் கடவுள். நுகர்வு தரும் சிற்றின்பத்துக்கும் ஆன்மீகப் பேரின்பத்துக்கும் இடையில் நிலவுவதாகச் சொல்லப்படும் சீனப்பெருஞ்சுவர் மாயமாக மறைந்து விட்டது. இந்தப் பேரின்பமென்பது சிற்றின்பத்தின் வாலில் தடவப்பட்டிருக்கும் ஆன்மீக வாசனைத் தைலம். தமது இஷ்ட தெய்வங்கள் மீது இந்த பக்தர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு,  தமது இஷ்ட பிராண்டுகள் மீது  நுகர்வோர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையே பெரிதும் ஒத்திருக்கிறது.

இது உத்திரவாதமில்லாத பரலோக இன்பவாழ்வை இலட்சியமாகக் கொண்டு இகலோகத் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இலக்கண வகைப்பட்ட ஆன்மீகமல்ல; உத்திரவாதமான இன்பத்துக்கான தேட்டம். ‘பக்தி’ என்று புனைபெயர் சூட்டிக் கொண்ட பிழைப்புவாதம். ஜோதியோ, லிங்கமோ, பக்திப் பரவசமோ அனைத்தும் இங்கே பிஸ்கெட் பாக்கெட்டுகளின் பளபளப்பான மேலுறைகள் மட்டுமே.

கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. ‘கஞ்சாவே பேரின்பம்’ என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.

‘மாலை போடுவது மடமை’ என்று நீங்கள் சாடினால், ‘ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’ என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். ‘பனிலிங்கம் பொய்’ என்று நீங்கள் கூறினால், “இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள்.

அல்லது “மகரஜோதியும் பனிலிங்கமும் மட்டுமா, உலகமே மோசடிகளால்தான் நிறைந்து இருக்கிறது” என்று தத்துவஞானத்தின் தளத்துக்கு விவாதத்தை தள்ளிச் செல்லுவார்கள். லஞ்சம், வரதட்சிணை, சாதி, வாஸ்து, சாமியார்கள், ராசிக்கல் என நியாயப்படுத்த முடியாத எல்லா அயோக்கியத்தனங்களையும் கொள்கையளவில் மறுப்பதற்கும், நடைமுறையில் அவற்றுடன் அனுசரித்துச் செல்வதற்கும் என்ன விதமான நியாயப்படுத்தல்களை சமூக வாழ்வில் நாம் எதிர்கொள்கிறோமோ, அவற்றைத்தான் பக்தர்களும் பயன்படுத்துகிறார்கள். பிழைப்புவாதமும் காரியசாத்தியவாதமும் பழகிவிட்டதால், அந்த வாதங்கள் அனைத்தையும், ‘பழகிய சைக்கிளை பழகிய ரோட்டில் ஓட்டும் இலாவகத்துடன்’  பயன்படுத்தி பகுத்தறிவை முறியடிக்கிறார்கள் இந்த பக்தர்கள்.

‘டபுள்யூ.டபுள்யூ.எஃப்’ என் றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள். கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல. யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது.  இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். ‘குத்து.. கொல்லு’ என்று வெறிகொண்டு கூச்சலிடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார்? நடிகன் யார், ரசிகன் யார்? தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் போட்டுக் கொள்பவன் யார்? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார், கன்னிச்சாமி யார்?

இது ஒரு வகைப் ‘பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் ‘பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது ‘ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

வினவு-வினை செய்

 

பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? ‘மகரஜோதி பொய்’ என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை ‘மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்’ என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?

******

மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?

*******

எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து  காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!

******

மாலை போடுவது மடமை’ என்று நீங்கள் சாடினால், ‘ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’ என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். ‘பனிலிங்கம் பொய்’ என்று நீங்கள் கூறினால், “இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள்.

***********